Monday, January 12, 2009

ராஜராஜேஸ்வரம்


தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள "ராஜராஜேஸ்வரம்" கோவில்களின் கோவில் என்று அழைக்கப்படுவதுண்டு. சோழர் ஆட்சியின் பொற்காலமாகிய கி.பி. 1000 இல் கட்டப்பெற்ற இக்கோவில், கலையின் உன்னதமான ஒரு பரிணாமம் எனலாம்.சோழர்களைப் பொறுத்த மட்டில் கோவில்கள் வெறும் கலைநயத்தை எடுத்துரைக்கும் ஒன்றாக மட்டும் இருக்கவில்லை. மாறாக, மக்களின் இயல்பு வாழ்க்கையே கோவிலைச் சுற்றி பின்னப்பட்டிருந்தது.விமானத்தின் பக்கச்சுவர்களில் உள்ள 107 பத்திகளைக் கொண்ட கல்வெட்டு தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானத்தில் ராஜராஜசோழன் மற்றும் அவரது தமக்கை குந்தவி தேவியார் அவர்களின் பங்களிப்பைப் பற்றி கூறுகிறது. இக்கோவில் ஒரு கோட்டைக்குள் அமைந்துள்ளது. அதன் மதில்கள் கி.பி.16 ஆம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பெற்றவயாக தெரிகின்றன. இக்கோவிலின் பிரதான விமானம் 200 அடி உயரம் கொண்டதாகவும், "தக்ஷின மேரு" எனும் சிறப்பு பெயருடனும் அழைக்கப்படுகின்றது.*என்கொன சக்கரம் 81 கிலோ எடையுள்ள ஒரு பளிங்குக்கல்லின் மீது அமர்ந்துள்ளது. கோவில் உள்ள இடத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து இக்கல் விசேஷமாக கொண்டுவரப்பட்டது என்று நம்பப்படுகின்றது. சக்கரத்தின் மூலைகளில் பிரம்மாண்டமான நந்திகளும், அதன் மேல் 3.8 மீட்டர் உயரமுள்ள கலசமும் அமைந்துள்ளன.நூற்றுக்கணக்கான சுவரோவியங்கள் விமானத்தை அலங்கரிக்கின்றன. (அவை பின்வந்த மராட்டியர்களால் சேர்க்கப்பட்டவை என்றொரு கூற்றும் உண்டு) மூலவராகிய பெருவுடையார் (ராஜராஜேஸ்வரமுடையார்) சிவலிங்கம் மிகப்பெரியதாய் இரண்டடுக்கு சுவர்களால் சூழப்பட்டதாய் உள்ளது. அச்சுவர்கைல் உள்ள கலைநயமிக்க சிற்பங்களும் சுவரோவியங்களும் காண்போரை வியக்கச்செஇபவையாய் உள்ளன.இக்கோவிலின் நீளமான பிரகாரமும் அதன் சுற்றுச்சுவர்களும் நம்மை ராஜராஜ சோழரின் காலத்திற்கே அழைத்துச்செல்கின்றன. பக்கச்சுவர்கள் முழுதும் பல்வேறு சிலைகளும் நந்திகளும் சிவலிங்கங்களும் நிறைந்த தூண்களோடு கூடிய விதானம் உள்ளது. கோவிலின் உள்ளேயே உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலும்,அருணகிரி நாதரால் பாடப்பெற்ற சுப்பிரமணியர் திருக்கோவிலும் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவையாகும்.கோவிலின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்கள் முழுதும் நாயன்மார்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் மற்றும் 108 பரதநாட்டிய அபினயனங்களுடன் கூடிய சிவனின் (ஆடல்வல்லான், நடராஜர், திரிபுராந்தகர், தட்சிணாமூர்த்தி) உருவங்கள்ம் சோழர்களுக்கே உரிய விசேஷ முறையில் சுவரோவியங்களாக தீட்டப்பெற்றுள்ளன.கற்பக்கிரகம், அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபம், இவை யாவும் தனித்தனியாக இருந்தாலும், காண்போரை வியக்க வைக்கும் வண்ணம் ஒரு ஒருங்கினைந்த அமைப்பைக் கொண்டு, ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே கட்டடக்கலையில் இப்படி ஒரு புரட்சியை செய்ய முடிந்தது எப்படி எனும் கேள்வியை எழுப்புகின்றது. மண்டப நுழைவாயில்களும் கோபுரங்களுடன் கூடிய பிரகார நுழைவாயில்களும் மிகப்பிரம்மாண்டமாய் அமைந்துள்ளன. பிரம்மாண்டமான கட்டமைப்புகளும், நுண்கலையுடன் கூடிய சிற்பங்களும் சோழர்களின் எண்ணிலடங்கா திறமைகளை எடுத்துக்கூற வல்லவையாக உள்ளன.இக்கோவிலில் பள்ளிகொண்டுள்ள சிவனாரின் பெயர் "தக்ஷின மேரு விடங்கர்" எனவும், "ஆடவல்லான்" எனவும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட நந்தியும் கோவிலின் பிரம்மாண்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் 25 டன் எடையுடன், 12 அடி உயரமும் 20 அடி நீளமும் கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment