Monday, January 12, 2009

சோழர் கால அரசியல் அமைப்பு


வருவாய் நிர்வாகம்

சோழர்கால வருவாய்த்துறை நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது. அது புரவுவரித்திணைக்களம்" என்று அழைக்கப்பட்டது. அனைத்து நிலங்களும் முறையாக அளக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, வரி மதிப்பீடுகள் செய்யப்பட்டன. கிராம குடியிருப்புப் பகுதிகள் "ஊர் நத்தம்" எனப்பட்டன. இப்பகுதியும், ஆலயங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலப்பகுதியும் வரிவிலக்கு பெற்றிருந்தன. நில வரியைத்தவிர, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கான "சுங்க" மும் வசூலிக்கப்பட்டது. பல்வேறு தொழில்களுக்கும் வரிவிதிக்கப்பட்டன. திருமணம், சடங்குகள் போன்ற நிகழ்வுகளின் போதும் வரி வசூலிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதங்களும் மற்றொரு வருவாயாகும். இடர்மிக்க காலங்களில் வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. முதலாம் குலோத்துங்கன் வரிவிலக்களித்ததற்காக "சுங்கம் தவிர்க்க சோழன்" எனும் விருதுப்பெயரை அடைந்தான். அரசன், அரசவை, இராணுவம், கடற்படை, சாலை பராமரிப்பு, நீர்ப்பாசன ஏரிகள், கால்வாய்கள் அமைத்தல் போன்றவை அரசின் செலவினங்களாக இருந்தன.

ராணுவ நிர்வாகம்:
யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, கப்பற்படை என்ற பிரிவுகளைக் கொண்ட நிலையான படையை சோழர்கள் பெற்றிருந்தனர். கல்வெட்டுகளில் சுமார் எண்பது படைப்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசரின் தனிப்படை "கைக்கோளப் பெரும்படை" என்று அழைக்கப்பட்டது. அதற்குள்ளேயே அரசரைப்பாதுகாக்கும் சிறப்புக்காவல் வீரர்கள் "வேளைக்காரர்" எனப்பட்டனர். ராணுவத்துக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. ராணுவ முகாம்கள் "கடகங்கள்" எனப்பட்டன. சோழர்கள் கடற்கரைப் பராமரிப்பில் தனிக்கவனம் செலுத்தினர். தமிழர்களின் கடற்படை ஆற்றல் சோழர்கள் காலத்தில் புகழ்மிக்கு விளங்கியது. மலபார், சோழமண்டலக் கடற்கரை ஆகியன அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. வங்காள விரிகுடா "சோழ ஏரி" யாகவே சில காலம் இருந்தது.

மாகாண ஆட்சி:
சோழப்பேரரசு மண்டலங்களாகவும், மண்டலம் பல வளநாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. நாடு என்ற பகுதியில் பல தன்னாட்சி பெற்ற கிராமங்கள் இருந்தன. மண்டலங்களின் நிர்வாகத்தை அரச குலத்தை சேர்ந்த ஆளுநர்கள் கவனித்து வந்தனர். வளநாட்டை பெரிய நாட்டாரும், நாடு பகுதியை நாட்டாரும் நிர்வகித்தனர். நகர நிர்வாகத்தை "நகரத்தார்" என்ற அவை மேற்கொண்டது.

கிராம சபைகள்:
சபைகளும், சபைக்குழுக்களும் கொண்ட கிராம தன்னாட்சிமுறை காலங்காலமாக தமிழ்நாட்டில் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது. சோழர் ஆட்சி காலத்தில் அது ஏற்றம் பெற்று விளங்கியது. "முதலாம் பராந்தக சோழன்" ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுக்கள் கிராம சபைகளின் நடவடிக்கைகள் பற்றி விவரிக்கின்றன. அந்த கிராமம் முப்பது குடும்பு (வார்டு) களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்பிளிருந்தும் கிராம சபைக்கான பிரதிநிதி தெரிவு செய்யப்பட்டார். கிராமசபை உறுப்பினராவதற்கான தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அவையாவன:

எ. குறைந்தபட்சம் காலவெளி நிலமாவது சொந்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஆ. சொந்த இல்லத்தில் குடியிருக்க வேண்டும்.
இ. முப்பது வயதுக்கு மேலும் எழுபது வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
ஈ. வேதங்கள் குறித்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

இருப்பினும், யார் யார் தகுதியற்றவர்கள் என்பது அக்கல்வெட்டுகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை
எ. கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கிராம சபையில் உறுப்பினராக பணியாற்றியவர்கள்.
ஆ. கிராம சபைக்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றி சரிவர கணக்குகளை அளிக்காதவர்கள்.
இ. பஞ்சமா பாதகங்களை செய்தவர்கள்.
ஈ. பிறர் பொருட்களை களவாடியவர்கள்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை பனைஒலைகளில் எழுதி ஒரு குடத்துக்குள் இட்டு சிறுவன் அல்லது சிறுமி ஒருவரை விட்டு எடுக்கச் சொல்வர். இதற்கு "குடவோலை" முறை என்று பெயர். இவ்வாறு முப்பது குடும்புகளின் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர். பின்னர் முப்பது பேர் கொண்ட கிராம சபை ஆறு வாரியக்குழுக்களாக பிரிந்து செயல்படும். சம்வத்சர வாரியம், ஏரிவாரியம், தொட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், புரவுவரி வாரியம் என்பதே அந்த ஆறு வாரியங்கள். ஆறுவிதப்பொறுப்புகளை அவை நிறைவேற்றும். இதன் உறுப்பினர்கள் குழுமப்பெருமக்கள் எனப்பட்டனர். கோவில் அல்லது மரநிழலில் கூடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குழுக்களின் எண்ணிக்கையும் கிராமத்திற்கு கிராமம் வேறுபட்டிருந்தது.

சமூக, பொருளாதார வாழ்க்கை:
சோழர் காலத்தில் ஜாதிமுறை பரவலாகப் பின்பற்றப்பட்டது. பிராமணர்களும், சத்திரியர்களும் பல்வேறு சலுகைகளைப் பெற்றிருந்தனர். சோழர்காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் வலங்கை, இலங்கை சாதிப்பிரிவுகள் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இருப்பினும், பல்வேறு ஜாதியினருக்கிடையே ஒற்றுமை காணப்பட்டது. அரச குடும்பத்தாரிடையே "சதி" எனும் உடான்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. கோவில்களுடன் பிணைக்கப்பட்டிருந்த நாட்டிய மகளிர் அடங்கிய "தேவதாசி" முறை சோழர் காலத்தில்தான் தோன்றி வளர்ந்தது.
சோழர் காலத்தில் சைவமும், வைணவமும் தழைத்தன. சோழ அரசர்கள், அரசிகளின் ஆதரவினால் ஏராளமான கோவில்கள் எழுப்பப்பட்டன. சோழர்காலக் கோவில்கள் பொருளாதார நடவடிக்கைகளின் மையங்களாகத் திகழ்ந்தன. மடங்களும் செல்வாக்கு பெற்றிருந்தன. வேளாண்மையும் தொழிழும் சிறந்து விளங்கின. காடுகள் திருத்தப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டதாலும், நீர்ப்பாசன ஏரிகள் வெட்டப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டதாலும் வேளாண்தொழில் வளர்ச்சிபெற்றது. நீர்ப்பாசனத் துறையைக் கவனித்தவர்கள் "கார்காத்தார்" என்று அழைக்கப்பட்டனர்(ஆதாரம்:BBC_The_Story_of_India_04-Ages_of_Gold-7 ஆவணப்படம்).
நெசவுத்தொழில், குறிப்பாக காஞ்சியில் பட்டுநெசவு புகழ்பெற்று விளங்கியது. கோவில்களிலும், வீட்டு உபயோகத்திற்கும் பெரும் தேவை இருந்ததால் உலோகத்தொழில் நன்கு வளர்ச்சியடைந்தது. வாணிபம் சுறுசுறுப்புடன் நடைபெற்றது. வாணிகக் குழுக்கள் செயல்பட்டன. வணிகப்பெருவழிகள் நன்கு பராமரிக்கப்பட்டன. தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றாலான வெவ்வேறு மதிப்பினாலான நாணயங்கள் பழக்கத்திலிருந்தன. சோழப்பேரரசு காலத்தில் சீனா, சுமத்ரா, ஜாவா,அரேபியா போன்ற நாடுகளோடு வாணிப உறவுகள் செழித்தன. குதிரைப்படைக்குத் தேவையான அரபு நாட்டுக் குதிரைகள் பெருமளவு இறக்குமதி செய்யப்பட்டன.

No comments:

Post a Comment