Tuesday, January 13, 2009

சோழ நாடு சோறுடைத்து


பொங்குக பொங்குக பைந்தமிழ் மொழிபோல்

பண்டைத் தமிழர் மனம்போல்

கரைபுரண் டோடும் காவிரி நதிபோல்

பொங்கும் மகிழ்ச்சி தமிழர் இல்லமெல்லாம் பரவ...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

Monday, January 12, 2009

ராஜராஜேஸ்வரம்


தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள "ராஜராஜேஸ்வரம்" கோவில்களின் கோவில் என்று அழைக்கப்படுவதுண்டு. சோழர் ஆட்சியின் பொற்காலமாகிய கி.பி. 1000 இல் கட்டப்பெற்ற இக்கோவில், கலையின் உன்னதமான ஒரு பரிணாமம் எனலாம்.சோழர்களைப் பொறுத்த மட்டில் கோவில்கள் வெறும் கலைநயத்தை எடுத்துரைக்கும் ஒன்றாக மட்டும் இருக்கவில்லை. மாறாக, மக்களின் இயல்பு வாழ்க்கையே கோவிலைச் சுற்றி பின்னப்பட்டிருந்தது.விமானத்தின் பக்கச்சுவர்களில் உள்ள 107 பத்திகளைக் கொண்ட கல்வெட்டு தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானத்தில் ராஜராஜசோழன் மற்றும் அவரது தமக்கை குந்தவி தேவியார் அவர்களின் பங்களிப்பைப் பற்றி கூறுகிறது. இக்கோவில் ஒரு கோட்டைக்குள் அமைந்துள்ளது. அதன் மதில்கள் கி.பி.16 ஆம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பெற்றவயாக தெரிகின்றன. இக்கோவிலின் பிரதான விமானம் 200 அடி உயரம் கொண்டதாகவும், "தக்ஷின மேரு" எனும் சிறப்பு பெயருடனும் அழைக்கப்படுகின்றது.*என்கொன சக்கரம் 81 கிலோ எடையுள்ள ஒரு பளிங்குக்கல்லின் மீது அமர்ந்துள்ளது. கோவில் உள்ள இடத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து இக்கல் விசேஷமாக கொண்டுவரப்பட்டது என்று நம்பப்படுகின்றது. சக்கரத்தின் மூலைகளில் பிரம்மாண்டமான நந்திகளும், அதன் மேல் 3.8 மீட்டர் உயரமுள்ள கலசமும் அமைந்துள்ளன.நூற்றுக்கணக்கான சுவரோவியங்கள் விமானத்தை அலங்கரிக்கின்றன. (அவை பின்வந்த மராட்டியர்களால் சேர்க்கப்பட்டவை என்றொரு கூற்றும் உண்டு) மூலவராகிய பெருவுடையார் (ராஜராஜேஸ்வரமுடையார்) சிவலிங்கம் மிகப்பெரியதாய் இரண்டடுக்கு சுவர்களால் சூழப்பட்டதாய் உள்ளது. அச்சுவர்கைல் உள்ள கலைநயமிக்க சிற்பங்களும் சுவரோவியங்களும் காண்போரை வியக்கச்செஇபவையாய் உள்ளன.இக்கோவிலின் நீளமான பிரகாரமும் அதன் சுற்றுச்சுவர்களும் நம்மை ராஜராஜ சோழரின் காலத்திற்கே அழைத்துச்செல்கின்றன. பக்கச்சுவர்கள் முழுதும் பல்வேறு சிலைகளும் நந்திகளும் சிவலிங்கங்களும் நிறைந்த தூண்களோடு கூடிய விதானம் உள்ளது. கோவிலின் உள்ளேயே உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலும்,அருணகிரி நாதரால் பாடப்பெற்ற சுப்பிரமணியர் திருக்கோவிலும் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவையாகும்.கோவிலின் உட்புற மற்றும் வெளிப்புற சுவர்கள் முழுதும் நாயன்மார்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் மற்றும் 108 பரதநாட்டிய அபினயனங்களுடன் கூடிய சிவனின் (ஆடல்வல்லான், நடராஜர், திரிபுராந்தகர், தட்சிணாமூர்த்தி) உருவங்கள்ம் சோழர்களுக்கே உரிய விசேஷ முறையில் சுவரோவியங்களாக தீட்டப்பெற்றுள்ளன.கற்பக்கிரகம், அர்த்தமண்டபம் மற்றும் மகாமண்டபம், இவை யாவும் தனித்தனியாக இருந்தாலும், காண்போரை வியக்க வைக்கும் வண்ணம் ஒரு ஒருங்கினைந்த அமைப்பைக் கொண்டு, ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே கட்டடக்கலையில் இப்படி ஒரு புரட்சியை செய்ய முடிந்தது எப்படி எனும் கேள்வியை எழுப்புகின்றது. மண்டப நுழைவாயில்களும் கோபுரங்களுடன் கூடிய பிரகார நுழைவாயில்களும் மிகப்பிரம்மாண்டமாய் அமைந்துள்ளன. பிரம்மாண்டமான கட்டமைப்புகளும், நுண்கலையுடன் கூடிய சிற்பங்களும் சோழர்களின் எண்ணிலடங்கா திறமைகளை எடுத்துக்கூற வல்லவையாக உள்ளன.இக்கோவிலில் பள்ளிகொண்டுள்ள சிவனாரின் பெயர் "தக்ஷின மேரு விடங்கர்" எனவும், "ஆடவல்லான்" எனவும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட நந்தியும் கோவிலின் பிரம்மாண்டத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் 25 டன் எடையுடன், 12 அடி உயரமும் 20 அடி நீளமும் கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

இடைக்காலச் சோழர்களின் வரலாற்றுச் சுருக்கம்


கி.பி.10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழர்கள் தமிழகத்தின் சக்தி வாய்ந்த பேரரசாக உருவெடுத்தனர். முதலில் தஞ்சையையும் பின்னர் கங்கைகொண்ட சோழபுரத்தையும் தலைநகராகக் கொண்ட அவர்கள் இந்திய தீபகற்பத்தின் பறந்து விரிந்த நிலப்பரப்பையும் தாண்டி, கி.பி.1025 வாக்கில் இந்தியாவின் தெற்கு, மேற்கு பகுதிகளில் இருந்த தீவுகளையும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளையும் தம் ஆட்சிப் பொறுப்பின் கீழ் கொண்டுவந்தனர்."... கி.பி.9 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சோழப்பேரரசு தென்னிந்தியாவின் தன்னிகரில்லா சக்தியாகத் திகழ்ந்தது. அதன் தனிப்பெரும் சக்தியான மாபெரும் கடற்படையைக் கொண்டு அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளை தனக்குள் அடக்கியது. குப்தர்கள் காலத்திலிருந்தே சோழ வம்சம் ஒரு தனிப்பெரும் சக்தியாக விளங்கி வந்தது. போர்க்கலையையும் தவிர்த்து சோழர்கள் கடல் வாணிபத்தில் தலை சிறந்து விளங்கி வந்தனர்" என்று இந்தியாவின் முதல் பிரதமர் மறைதிரு. ஜவகர்லால் நேரு அவர்கள் தனது " உலக வரலாற்றின் மின்னல்கள்" (Glimpses of World History) எனும் நூலில் தெளிவாக இடைக்காலச் சோழர்களின் சிறப்பை விளக்கியுள்ளார்.எ.ல். பாஷம் எனும் வட இந்திய வரலாற்று ஆசிரியர் தனது "வாண்டர் தட் வாஸ் இந்தியா" எனும் புத்தகத்தில், வரலாற்றின் இடைக்காலத்தில் சோழர்களின் தவிர்க்க முடியா முக்கியத்துவத்தை பின்வருமாறு விளக்குகிறார்..." இடைக்காலத்தில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வலிமை வாய்ந்த பேரரசாக சோழப் பேரரசு திகழ்ந்து வந்தது. நவீன காலத்திற்கு முன்பாகவே இந்தியப் பெருங்கடலின் அநேக பகுதிகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த வலிமைமிகு கடல் சக்தியாக சோழர்கள் விளங்கி வந்தனர். கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்கு முன்பான காலத்தை எடுத்து கொண்டால், சோழர்கள் மட்டுமே தெற்காசியாவின் கடல் ராஜ்யத்தை ஆண்டு வந்தனர்"சோழர்களின் பல்துறை வளர்ச்சியைக் கண்டு, ஒரு தமிழகத்தை சாராத வரலாற்றாசிரியரே தனது "Currents of South-East Asian History" மற்றும் "Kings of World Stature" புத்தகங்களில் முதலாம் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திரனின் சிறப்பை வியந்து போற்றியுள்ளார்.

இடைக்காலச் சோழர்கள் (கி.பி.848 - கி.பி.1029)

1. விஜயாலய சோழன் : கி.பி.848-881 : பெற்றோர் பெயர் அறியப்படவில்லை
தலைநகரம்: பழையாறை, பிநாளில் தஞ்சை

2.ஆதித்த சோழன் :848-881 கி.பி. : (1) இன் மகன்
தலைநகரம்: தஞ்சை

3.பராந்தக சோழன் - 1: 848-881 கி.பி. : (2) இன் மகன்
தலைநகரம்: தஞ்சை
துறைமுகம்: நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கையை வென்றவர்

4.கண்டராதித்த சோழன் : 950-957 கி.பி. : (3) இன் இரண்டாம் மகன்
தலைநகரம்: தஞ்சை
துறைமுகம்: நாகப்பட்டினம்

5.அரிஞ்சய சோழன் : 956-957 கி.பி. :(3) இன் மூன்றாம் மகன்
தலைநகரம்: தஞ்சை
துறைமுகம்: நாகப்பட்டினம்

6.பராந்தக சோழன்-2 : (சுந்தர சோழன்) 957-970 கி.பி. (5) இன் மகன்
தலைநகரம்: தஞ்சை
துறைமுகம்: நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கையை வென்றவர்

(7) உத்தம சோழன் : கி.பி. 970-985 - (4) இன் மகன்
தலைநகரம் - தஞ்சாவூர்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கையை வென்றவர்

(8) ராஜராஜ சோழன் - 1 : கி.பி. 985-1014 - (6) இன் மகன்
தலைநகரம் - தஞ்சாவூர்
துறைமுகம் - நாகப்பட்டினம்
வட இந்தியாவின் கலிங்கத்தை வெற்றி கொண்டவர்
கடல் கடந்து இலங்கையையும் மாலத்தீவுகளையும் வென்றவர்
சீன நாட்டுடன் அரசியல் தொடர்பு கொண்டிருந்தவர்

(9) ராஜேந்திர சோழன் - 1: கி.பி.1012-1044 - (8) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
வட இந்தியாவின் கங்கை முதல் வங்கதேசம் வரையிலான பகுதிகளை வென்றவர்
கடல் கடந்து இலங்கை, லக்ஷ தீவுகள், மாலத்தீவுகள், அந்தமான் நிக்கோபார், கீழ் பர்மா, கீழ் தாய்லாந்து, மலேசியாவின் பல பகுதிகள், இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் லாவோ தீவுகளையும் (கம்போடியா மன்னரின் நட்பு பொருட்டு) வென்றவர்.
கம்போடியா மற்றும் சீனாவுடன் அரசியல் தொடர்பு கொண்டிருந்தார்.

(10) ராஜாதிராஜ சோழன் - 1: கி.பி.1018-1054 - (9) இன் மூத்த மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கைக்கு படையெடுத்தவர்

(11) ராஜேந்திர சோழன் - 2 : கி.பி. 1051-1063 - (9) இன் இரண்டாம் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கைக்கு படையெடுத்தவர்

(12) வீரராஜேந்திரசோழன் : கி.பி.1063-1070 - (9) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

கடல் கடந்து இலங்கை, கீழ் பர்மா, மலேசியாவின் கேதா, இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் ஜாவா வின் சில பகுதிகள், மற்றும் காண்டோனுக்கு அருகிலுள்ள தாவொயிஸ்த் சீனா பகுதிகளை தனது மருமகன் முதலாம் குலோத்துங்க சோழனை - (14) கொண்டு வென்றார்.

(13) அதிராஜேந்திர சோழன் : கி.பி. 1067-1070 - (12) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(14) குலோத்துங்கசோழன் - 1 : கி.பி.1070-1120 - (10), (11), & (12) இன் தமக்கை மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கைக்கு படையெடுத்தவர்.

(15) விக்கரமசோழன்: கி.பி. 1118-1135 - (14) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(16) குலோத்துங்க சோழன் - 2 : கி.பி. 1133-1150 - (15) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(17) ராஜராஜசோழன்- 2 : கி.பி.1146-1163 - (16) இன் மகன்
தலைநகரம்: கங்கைகொண்டசோழபுரம், பிற்காலத்தில் ராஜராஜபுரம்(பழையாறை)
துறைமுகம் - நாகப்பட்டினம்

(18) ராஜாதிராஜசோழன் - 2 : கி.பி.1163-1178 - (15) இன் பேரன் & (17) இன் ஒன்று விட்ட சகோதரர்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்
கடல் கடந்து இலங்கைக்கு படையெடுத்தவர்.

(19) குலோத்துங்கசோழன்- 3 : கி.பி.218 - (17) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(20) ராஜராஜசோழன்- 3 : கி.பி. 256 - (19) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

(21) ராஜேந்திரசோழன்- 3 : கி.பி.1246-1279 - (20) இன் மகன்
தலைநகரம் - கங்கைகொண்டசோழபுரம்
துறைமுகம் - நாகப்பட்டினம்

சோழ வள நாடு

சோழ க்கள் வாழ்க்கைமுறையைப்பற்றி இத்தளத்தில் பதிய வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் தோற்றுவித்த எழுத்துக்களே பின்வருபவை. வரலாற்றுக் கதையுலகின் முடிசூடா மன்னர்களுள் ஒருவரான "சாண்டில்யன்" அவர்களின் "கன்னி மாடம்" புதினத்தின் 43 ஆம் அத்தியாயத்தின் துவக்கத்தில் மிகத்தெளிவாக சோழர்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி விளக்கியுள்ளார் (தலைநகர மக்கள்).இந்நாவலில் குறிப்பிடப் பட்டுள்ள அரசன்: இரண்டாம் ராஜாதிராஜன்

ஆட்சிக் காலம் : கி.பி.1163-1178

கங்கையினும் புனிதமான காவிரியின் பாய்ச்சலால் பயிரும் மன்னுயிரும் செழித்துச் சிறந்து ஓங்கிய சோழ மண்டலத்தின் தலைநகரன்களுள் ஒன்றான கங்கை கொண்ட சோழபுரத்தின் பிரம்மாண்டமான கட்டடங்களின் கிரீடங்கள், சற்று தூரத்தே தெரிந்த சோழமங்கலம் என்ற ஏரியின் பெரிய நீர்ப்பரப்பில் பிரதிபளித்துக்கொண்டிருந்தன. வடநாடு வென்று வாகைசூடிய ராஜேந்திரன் வல்லமைக்கும் தமிழ்ச் சிற்பிகளின் கைத்திறனுக்கும் அடையாளமாக விளங்கிய அந்த நகரத்தின் கோட்டைச் சுவர்களை திடீரென்று அணுக பயந்த காலைச் சூரியன் எதிரேயிருந்த சொலைமரங்களின் இடுக்குகள் வழியாக தன் கிரகானங்களைச் செலுத்தி பார்க்கத் தொடங்கினான். நகரத்துக்கு நாயகமாக விளங்கிய சோழன் கேரளன் என்ற பிரசித்தி பெற்ற மன்னர்பிரான் அரண்மனையில் இன்னிசைக் கருவிகளின் உதயநாதம் எழும்பி, அரண்மனைச்சுவர்களில் தாக்கி அரண்மனையையே நாதமயமாக அடித்துக் கொண்டிருந்தது.அரண்மனையை அடுத்தாற்போல் எவலாலருக்காக நிர்மானிக்கப்பட்டிருந்த "திருமஞ்சனத்தார் வேள" த்தில் விடியுமுன்பே ஏற்பட்ட வேலைப்பரபரப்பு, கதிரவன் தலைகாட்டியதும் அதிகமாகி ஏவலாளர் அங்குமிங்கும் அதிவேகமாக நடமாடிக்கொண்டிருந்தாலும், மன்னன் தியிலேழாத காரணத்தால் சப்தம் சிறிதும் தெரியாமல் அடி மேல் அடி வைத்து நடந்துகொண்டிருந்தனர். ஆனால் மன்னற்கு மன்னனாய், உயிருக்கெல்லாம் பேருயிறாய் விளங்கி வந்தவனும், ஒன்பதாம் திருமறையில் சேர்க்கப்பட்டுள்ள கருவூர்த்தேவரின் பதிகமொன்றில் சிறப்பிக்கப்பட்டவனுமான சிவபெருமான் உறையும் கங்கைகொண்ட சோழேசுரத்தின் சங்கங்கள் பூம்பூம் என்று சப்தித்துக் கொண்டிருந்ததன்றி மேளவாத்தியங்களும் பலமாக முழங்கிக்கொண்டிருந்தன. நூறடிச் சதுரமாக அமைந்துள்ள அந்த நூற்றெழுபதடி உயரமுள்ள ஒன்பது அடுக்குச் சொழேச்சரக் கோபுரமும் ராஜராஜன் சிருஷ்டித்த தஞ்சைப் பெரிய கோயிலுக்குத் தன் நிழழை எந்த இடத்திலும் பாய்ச்சாது கர்வத்துடன் ஆகாயத்தில் தலைநிமிர்ந்து நின்றுகொண்டிருந்தது. அந்த கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளும் ஒற்றைச் சிவலிங்கமும் சிங்கத்தின் வயிற்றில் சிங்கமே பிறக்கும் என்பதைப் போல் இராஜராஜன் வயிற்றில் பிறந்த இராஜேந்திர சோழன் கலை உணர்ச்சியில் தந்தைக்குச் சிறிதும் சளைத்தவனல்ல என்பதற்கு சான்றுகளாக விளங்கின. இத்தனை அழகான நகருக்கு மெருகு கொடுக்காதிருப்பது தவறு என்ற எண்ணத்தால் மெள்ள மெள்ள நகரத்தின் மதில்களையும் சொழேச்சரத்தின் தங்கக் கவசங்களையும் அரண்மனையின் கிரீடங்களையும் தழுவத் தொடங்கிய சூரிய கிரகணங்கள் சோழ சங்கத்தின் நீர்ப்பரப்பிலும் பாய்ந்து வெள்ளி அலைகளைத் தரைக்கு அனுப்பிக்கொண்டிருந்தன. சூர்யோதத்தை உணர்ந்துவிட்ட அரண்மனைக் கோட்டத்திலிருந்த போர் யானைகள் அசைந்தாடி எழுந்திருந்து திரும்பித் திரும்பி உடலை முறித்துத் துதிக்கைகளை உயர்த்தி பிளிறியதால் ஏற்பட்ட சத்தம் நகரத்துக்குப் புறம்பே கிடந்த சோலைகளை ஊடுருவிச் சென்றது மட்டுமன்றி, கட்டட மதில் சுவர்களையும் தாக்கிப் பயங்கரமாக எதிரொலி செய்தது. விடியற்காலையிலேயே திருமஞ்சன நீரைக் கொண்டுவரச் சொழகங்கத்துக்கு ஒட்டி செல்லப்பட்ட கோவில் யானைகள் நீரில் விழுந்து பெரிய அலைகளைத் தரையில் மோதவிட்டும் துதிக்கையால் நீரை உறிஞ்சி ஆகாயத்தில் வானம் போல விட்டும் விளையாடிக்கொண்டிருந்தன. இரவுக்காவலருக்கு ஓய்வளிக்கக் காவல் மற்ற வேண்டிய வீரர்கள் பலர் புரவிகளில் ஏறி கனவேகமாகச் சென்று கொண்டிருந்ததால் ராஜவீதிகளில் ஏற்பட்ட குதிரைக் காலடிகள் நகரமெங்கும் பலமாக சப்தித்துக் கொண்டிருந்தன. கடைவீதிகள் திறக்கத் தொடங்கியதால் பாத்திரங்களின் சப்தமும், உருண்டோடிய கட்டைவண்டிகளின் அரவமும், ஒரு பக்கத்திலிருந்து வீசிக் கொண்டிருந்த பூக்களின் வாசனையும் கங்கைகொண்டசொழபுரத்தின் பகற்கால நடவடிக்கைகள் துவங்கிவிட்டதை உணர்த்தின. பகல் வேலையில் முதல் ஜாமத்தில் சப்திக்க வேண்டிய உதயகாலத் தாரைகள் கோட்டை வாசலில் திரும்பாத் திரும்ப முழங்கத் துவங்கின. ஏரியில் ஸ்நானம் செய்வதற்காகத் தோளில் பட்டாடைகளையும் செவ்விடைகளில் குடங்களையும் தாங்கி நடந்த அந்த சோழபுர மங்கையரின் செங்கை வளையல்கள் குலுங்கியதாலும் கால்கொலுசுகள் முரன்று பாடியதாலும் ஏற்பட்ட இன்பகீதத்தை மாற்ற நீடுகளுக்குக் காட்டுவதற்காகக் காற்றுக் கடவுள் தன்னுடைய தென்றல் தூளியில் தூக்கி எடுத்துக்கொண்டு துரிதமாக வடக்கு நோக்கி செல்லலானான்.சூர்யோதத்தால் தட்டி எழுப்பப்பட்ட கறவைகளும் கன்றுகளும் காளைகளும் ஆயர்களால் ஓட்டிச் செல்லப்பட்டு மந்தைமந்தையாய் நகரத்துக்கு வெளியே தொலைதூரத்தில் கிடந்த மேய்ச்சல் வெளிகளுக்காகச் சென்றுகொண்டிருந்தன. ஆயர்கள் நான்குபுறத்திலும் ஓடி மந்தையிலிருந்து பிரிந்த கன்றுகளை விரட்டி அடக்கியும், மந்தையில் புகுந்து முட்டிய மாடுகளை கழியால் புடைத்து அடக்கியும், இடையில் கிடைத்த சிலவினாடிகளில் உல்லாசமாகப் பாடிக்கொண்டும் போய்க்கொண்டிருந்தனர். சோழகங்கத்தின் நீர்ப்பரப்பாலும் காவிரித்தாயின் வாய்க்கல்களாலும் வருடம் பூராவும் பாசனம் கிடைத்துக்கொண்டிருந்ததால் சதாசர்வகாலமும் பயிர்த்தொழில் நடந்து, "சோழவள நாடு சோறுடைத்து" எனும் பெருமையை உலகத்துக்கு அறிவித்துக்கொண்டிருந்த சோழ மண்டலத்தின் அந்த கோ நகரத்தின் கழநிவெளிகள் பச்சைப் பசேலென்று பெரிய பெரிய பயிர்ப்பாளங்களை நகரத்தைச் சுற்றி விரித்திருந்தன.

"ஓங்கு பெருந்செந்நெலூடு கயலுகள், பூங்குவளைப் போதிற் பொறிவண்டு கண்படுப்ப" என்று ஆண்டாள் கண்ட கனவைப் பதினொன்று பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் நனவாக்கித் தந்தது சோழர் அரசகுலம்.

சோழர் கால அரசியல் அமைப்பு


வருவாய் நிர்வாகம்

சோழர்கால வருவாய்த்துறை நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது. அது புரவுவரித்திணைக்களம்" என்று அழைக்கப்பட்டது. அனைத்து நிலங்களும் முறையாக அளக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, வரி மதிப்பீடுகள் செய்யப்பட்டன. கிராம குடியிருப்புப் பகுதிகள் "ஊர் நத்தம்" எனப்பட்டன. இப்பகுதியும், ஆலயங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலப்பகுதியும் வரிவிலக்கு பெற்றிருந்தன. நில வரியைத்தவிர, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கான "சுங்க" மும் வசூலிக்கப்பட்டது. பல்வேறு தொழில்களுக்கும் வரிவிதிக்கப்பட்டன. திருமணம், சடங்குகள் போன்ற நிகழ்வுகளின் போதும் வரி வசூலிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட அபராதங்களும் மற்றொரு வருவாயாகும். இடர்மிக்க காலங்களில் வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. முதலாம் குலோத்துங்கன் வரிவிலக்களித்ததற்காக "சுங்கம் தவிர்க்க சோழன்" எனும் விருதுப்பெயரை அடைந்தான். அரசன், அரசவை, இராணுவம், கடற்படை, சாலை பராமரிப்பு, நீர்ப்பாசன ஏரிகள், கால்வாய்கள் அமைத்தல் போன்றவை அரசின் செலவினங்களாக இருந்தன.

ராணுவ நிர்வாகம்:
யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, கப்பற்படை என்ற பிரிவுகளைக் கொண்ட நிலையான படையை சோழர்கள் பெற்றிருந்தனர். கல்வெட்டுகளில் சுமார் எண்பது படைப்பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசரின் தனிப்படை "கைக்கோளப் பெரும்படை" என்று அழைக்கப்பட்டது. அதற்குள்ளேயே அரசரைப்பாதுகாக்கும் சிறப்புக்காவல் வீரர்கள் "வேளைக்காரர்" எனப்பட்டனர். ராணுவத்துக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. ராணுவ முகாம்கள் "கடகங்கள்" எனப்பட்டன. சோழர்கள் கடற்கரைப் பராமரிப்பில் தனிக்கவனம் செலுத்தினர். தமிழர்களின் கடற்படை ஆற்றல் சோழர்கள் காலத்தில் புகழ்மிக்கு விளங்கியது. மலபார், சோழமண்டலக் கடற்கரை ஆகியன அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. வங்காள விரிகுடா "சோழ ஏரி" யாகவே சில காலம் இருந்தது.

மாகாண ஆட்சி:
சோழப்பேரரசு மண்டலங்களாகவும், மண்டலம் பல வளநாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. நாடு என்ற பகுதியில் பல தன்னாட்சி பெற்ற கிராமங்கள் இருந்தன. மண்டலங்களின் நிர்வாகத்தை அரச குலத்தை சேர்ந்த ஆளுநர்கள் கவனித்து வந்தனர். வளநாட்டை பெரிய நாட்டாரும், நாடு பகுதியை நாட்டாரும் நிர்வகித்தனர். நகர நிர்வாகத்தை "நகரத்தார்" என்ற அவை மேற்கொண்டது.

கிராம சபைகள்:
சபைகளும், சபைக்குழுக்களும் கொண்ட கிராம தன்னாட்சிமுறை காலங்காலமாக தமிழ்நாட்டில் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது. சோழர் ஆட்சி காலத்தில் அது ஏற்றம் பெற்று விளங்கியது. "முதலாம் பராந்தக சோழன்" ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த இரண்டு கல்வெட்டுக்கள் கிராம சபைகளின் நடவடிக்கைகள் பற்றி விவரிக்கின்றன. அந்த கிராமம் முப்பது குடும்பு (வார்டு) களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்பிளிருந்தும் கிராம சபைக்கான பிரதிநிதி தெரிவு செய்யப்பட்டார். கிராமசபை உறுப்பினராவதற்கான தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அவையாவன:

எ. குறைந்தபட்சம் காலவெளி நிலமாவது சொந்தமாக வைத்திருக்க வேண்டும்.
ஆ. சொந்த இல்லத்தில் குடியிருக்க வேண்டும்.
இ. முப்பது வயதுக்கு மேலும் எழுபது வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
ஈ. வேதங்கள் குறித்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

இருப்பினும், யார் யார் தகுதியற்றவர்கள் என்பது அக்கல்வெட்டுகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை
எ. கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கிராம சபையில் உறுப்பினராக பணியாற்றியவர்கள்.
ஆ. கிராம சபைக்குழுவில் உறுப்பினராகப் பணியாற்றி சரிவர கணக்குகளை அளிக்காதவர்கள்.
இ. பஞ்சமா பாதகங்களை செய்தவர்கள்.
ஈ. பிறர் பொருட்களை களவாடியவர்கள்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை பனைஒலைகளில் எழுதி ஒரு குடத்துக்குள் இட்டு சிறுவன் அல்லது சிறுமி ஒருவரை விட்டு எடுக்கச் சொல்வர். இதற்கு "குடவோலை" முறை என்று பெயர். இவ்வாறு முப்பது குடும்புகளின் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர். பின்னர் முப்பது பேர் கொண்ட கிராம சபை ஆறு வாரியக்குழுக்களாக பிரிந்து செயல்படும். சம்வத்சர வாரியம், ஏரிவாரியம், தொட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், புரவுவரி வாரியம் என்பதே அந்த ஆறு வாரியங்கள். ஆறுவிதப்பொறுப்புகளை அவை நிறைவேற்றும். இதன் உறுப்பினர்கள் குழுமப்பெருமக்கள் எனப்பட்டனர். கோவில் அல்லது மரநிழலில் கூடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் குழுக்களின் எண்ணிக்கையும் கிராமத்திற்கு கிராமம் வேறுபட்டிருந்தது.

சமூக, பொருளாதார வாழ்க்கை:
சோழர் காலத்தில் ஜாதிமுறை பரவலாகப் பின்பற்றப்பட்டது. பிராமணர்களும், சத்திரியர்களும் பல்வேறு சலுகைகளைப் பெற்றிருந்தனர். சோழர்காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் வலங்கை, இலங்கை சாதிப்பிரிவுகள் பற்றி குறிப்புகள் காணப்படுகின்றன. இருப்பினும், பல்வேறு ஜாதியினருக்கிடையே ஒற்றுமை காணப்பட்டது. அரச குடும்பத்தாரிடையே "சதி" எனும் உடான்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. கோவில்களுடன் பிணைக்கப்பட்டிருந்த நாட்டிய மகளிர் அடங்கிய "தேவதாசி" முறை சோழர் காலத்தில்தான் தோன்றி வளர்ந்தது.
சோழர் காலத்தில் சைவமும், வைணவமும் தழைத்தன. சோழ அரசர்கள், அரசிகளின் ஆதரவினால் ஏராளமான கோவில்கள் எழுப்பப்பட்டன. சோழர்காலக் கோவில்கள் பொருளாதார நடவடிக்கைகளின் மையங்களாகத் திகழ்ந்தன. மடங்களும் செல்வாக்கு பெற்றிருந்தன. வேளாண்மையும் தொழிழும் சிறந்து விளங்கின. காடுகள் திருத்தப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டதாலும், நீர்ப்பாசன ஏரிகள் வெட்டப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டதாலும் வேளாண்தொழில் வளர்ச்சிபெற்றது. நீர்ப்பாசனத் துறையைக் கவனித்தவர்கள் "கார்காத்தார்" என்று அழைக்கப்பட்டனர்(ஆதாரம்:BBC_The_Story_of_India_04-Ages_of_Gold-7 ஆவணப்படம்).
நெசவுத்தொழில், குறிப்பாக காஞ்சியில் பட்டுநெசவு புகழ்பெற்று விளங்கியது. கோவில்களிலும், வீட்டு உபயோகத்திற்கும் பெரும் தேவை இருந்ததால் உலோகத்தொழில் நன்கு வளர்ச்சியடைந்தது. வாணிபம் சுறுசுறுப்புடன் நடைபெற்றது. வாணிகக் குழுக்கள் செயல்பட்டன. வணிகப்பெருவழிகள் நன்கு பராமரிக்கப்பட்டன. தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றாலான வெவ்வேறு மதிப்பினாலான நாணயங்கள் பழக்கத்திலிருந்தன. சோழப்பேரரசு காலத்தில் சீனா, சுமத்ரா, ஜாவா,அரேபியா போன்ற நாடுகளோடு வாணிப உறவுகள் செழித்தன. குதிரைப்படைக்குத் தேவையான அரபு நாட்டுக் குதிரைகள் பெருமளவு இறக்குமதி செய்யப்பட்டன.