“ பாண்டியகுலாசநி வளநாட்டு தஞ்சாவூர்க் கூற்றத்து தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரமுடையார்க்கு நாங்குடுத்தநவும் அக்கன் குடுத்தநவும் நம் பெண்டுகள் குடுத்தநவும் மற்றும் குடுத்தார் குடுத்தநவும் ஸ்ரீவிமாநத்தில் கல்லிலே வெட்டுக என்று திருவாய்மொழிஞ்சருள வெட்டிந”
Friday, August 6, 2010
சோழ தேச சுற்றுப் பயணம்
சொற் சுவையும் பொருட் சுவையும் ததும்பி வழிகின்ற எவர்க்குமினிய எம் தாய்மொழி தமிழ் வாயிலாக வரலாற்றைக் கேட்கக் கேட்க மனம் எங்கும் மகிழ்ச்சி மத்தாப்பூ போல பூத் தூவும். அதுவும், "ஓங்கு பெருந்செந்நெலூடு கயலுகள், பூங்குவளைப் போதிற் பொறிவண்டு கண்படுப்ப" என்று ஆண்டாள் கண்ட கனவைப் பத்து பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் நனவாக்கித் தந்த சோழ வம்ச வரலாறென்றால் கேட்பார் அடையும் மன மகிழ்வுக்கு அளவே இருக்காது. ஒரு எழுத்தாளனுக்கு பொருட் சுவையைத் திறம்பட கொடுக்கும் திறமை மட்டும் போதாது; அதனுடன் சொற் சுவையும் சேரும் போதுதான் அதன் இனிமையும் முழுமை பெறும்; அனைவரையும் சரியான முறையில் போய்ச் சேரும். அந்த வகையில், இரு சுவையும் திறம்படக் கலந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு நம் முன்னோர்களின் காதல், வீரம், அரசியல் வாழ்வு, அவர் எடுப்பித்த நற்பணிகள் எனப் பல்வேறு அருஞ்செயல்களையும், சங்ககால இலக்கியங்கள், செப்பேடுகள், கல்வெட்டுக்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் மூலமிருந்து எடுத்தளிக்கும் பணியை வரலாற்று ஆய்வாளர்கள் பலர் ஈடுபட்டு வந்திருந்தாலும், எம் போன்ற கடைக்கோடி தமிழனுக்கும் விளங்கும் வகையில் அதைச் சேர்க்கும் பணியைத் தம் சிரமேற்கொண்டிருந்தவர்கள் வரலாற்று நெடுங்கதை ஆசிரியர்கள்தாம் என்றால் அது மிகையாகாது. அவற்றுள் சிறந்ததுவாகவும், தமிழ்த்தாயின் மணிமகுடத்தில் ஒளிவீசும் மாணிக்கமாகவும் கருதத் தக்கது அமரர்.திரு.கல்கி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் படைத்த "பொன்னியின் செல்வன்" எனப்படும் வரலாற்றுப் புதினமாகும். ௧௯௫௦ களில் கல்கி இதழில் தொடர்கதையாய் வெளிவந்த இப்புதினம், சுமார் மூன்று, நான்கு தலைமுறையைச் சேர்ந்த தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவரும் ஒரு உன்னதப் படைப்பாகும். பண்டைத் தமிழரின் மாண்பு, அவர் கொண்டிருந்த உயர்குணம், எம் தமிழ்நாட்டின்பால் இயற்கை அன்னை கொண்டிருந்த காதல், விவசாயத்தை செழித்தோங்கச் செய்த காவிரி நதியின் தீரம் உள்ளிட்ட பல செய்திகளையும் திறம்படவும், சுவைபடவும் எடுத்துரைக்கும் ஓர் களஞ்சியம் அந்த நெடுங்கதை என்றால் அது மிகையாகாது.
அமரர் திரு.சுஜாதா அவர்கள், ஒரு முறை தம் கட்டுரையில், "இணையம் என்பது கங்கை நதி போல; அதில் புனிதம் இருக்கும் அதே நேரம், பிணங்களும் மிதந்து வரும்; எதை எடுத்துக் கொள்வது என்பது ஒவ்வொருவரின் பார்வையைப் பொறுத்தது" என்று குறிப்பிட்டிருப்பார். அதற்கிணங்க, "பொன்னியின் செல்வன்" நெடுங்கதைக்காக ஆர்குட் சமூக இணையதளத்தில் தொடங்கப்பட்ட குழும உறுப்பினர்தாம் நாம். அவ்விணைய தளத்தில் இருக்கும் முற்றிலும் செயல்படாத பல குழுமங்களுக்கு இடையில், இடைவிடாத பணிகளுக்கு இடையிலும் இடறாது பதிவுகள் இட்டு வரும் இளமைநீங்கா இணையக் குழுமம் எம் குழுமம். பொன்னியின் செல்வனைத் தாண்டியும், சோழர் மீதும், பண்டைத்தமிழர் வரலாறு மீதும் காதல் கொண்ட நெஞ்சங்கள் ஒன்று கூடி விவாதிக்கும் களம் அது. விவாதத்தின் அடுத்த கட்டமாக, எம் முன்னோர்கள் ஆண்டு வாழ்ந்த தலைநகரங்களையும், அவர் எடுப்பித்த கற்றளிகளையும் அவற்றின் கலை நுணுக்கங்களையும் கண்டு களிக்கும்(வியக்கும்) பொருட்டு, "சோழ தேச சுற்றுப் பயணம்" திட்டமிடப்பட்டது. கடந்த வருடம் முதல் முறையாக எம் குழும உறுப்பினர்கள் அப்பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனர். பண்டைத் தமிழர்தம் செயற்கரிய கற்றளிகளையும், செவிக்கினிய வரலாற்றையும் ஒருமுறை கண்டும் கேட்டும் ரசித்தால் போதுமா என்ன!?? பருகப் பருக இனிமைதரும் அமுதமல்லவா அது!? அதனால் இவ்வருடமும் "சோழதேச சுற்றுப்பயணம்" திட்டமிடப் பட்டுள்ளது. சென்ற வருடம் பயணத்தை மாபெரும் வெற்றிப் பயணமாக நடத்தித் தந்த அதே குழு இவ்வருடமும் அப்பணியைத் திறம்பட மேற்கொள்ள சம்மதித்துள்ளது.(ஆர்குட் பக்கத்திற்கான சுட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன) ஒருங்கிணைப்பாளர் அன்புஇளவல்.ஜெயக்குமார்,மக்கள் தொடர்பாளர்,ஜோதிவேல் ஒலி-ஒளி ஓவியர் திருநாவுக்கரசு (ஆகா, என்ன ஒரு இனிமையான பெயர்)கணினியியல் கற்றிருந்தும் வரலாறு சொல்ல அதைப் பயன்படுத்துவது எப்படி என இடையறாது சிந்தித்துக் கொண்டிருக்கும் திருமதி.லக்ஷ்மி, மேலும் முக்கியமாக பயணத்திற்கென பிரத்தியேகமாக இயல் வட்ட மேலாடை (டி ஷர்ட்) வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கலை இயக்குனர் - புகைப்படவியலார் திரு சுப்பு அவர்கள் என அக்குழு திறம்பட தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த பயணத்திற்கான வெள்ளோட்டமாக, கடந்த இரு மாதங்களில், குழும மக்கள் தென்பாண்டி மண்டல, மற்றும் தொண்டை மண்டல சுற்றுப்பயணங்களை வெற்றிகரமாக மேற்கொண்டு வந்துள்ளனர். எம்போன்ற கடைக்குடிமகனும் இந்த பயணத்திற்காக, மிகுந்த ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் தயாராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பயணம் குறித்த ஏற்பாடுகளின் தற்போதைய நிலைகுறித்த ஒரு சிறு பார்வை... இவ்வருடம் ஜூலை ஒன்பது, பத்து, பதினொன்றாம் தேதிகளில் திட்டமிடப்பட்டிருந்த பயணம், தவிக்க முடியாத சில காரணங்களாலும், சென்ற கன்னிப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகச்சில குறைபாடுகளைத் தவிர்க்க எண்ணியும், ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது (பதினாறு, பதினேழு, பதினெட்டு). இன்னும் பதினெட்டு நாட்களே உள்ள நிலையில், நாம் பயணிக்கவிருக்கும் சீருந்து, தங்கவிருக்கும் விடுதி அறைகள் முதலியவை முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இயல்வட்ட மேலாடை வடிவமைப்பு இன்னும் ஒருவாரத்திற்குள் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணத்தில் பார்க்க வேண்டிய இடங்களாக திட்டமிடப்பட்டிருப்பவை, பின்வருமாறு - தஞ்சைப் பெரிய கோவில், பட்டீஸ்வரம், தாராசுரம், பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை, கீழப்பழுவூர், மேலப்பழுவூர், நார்த்தாமலை, குமியன்மலை, கங்கைகொண்ட சோழபுரம், புள்ளமங்கை, திருவாரூர், வேப்பத்தூர், திருவாடுதுறை, சித்தன்னவாசல், பழையாறை, நிசும்பசூதனி திருக்கோவில்(தஞ்சை), காளி கோவில் (தஞ்சை) மற்றும் கொடும்பாளூர். பண்டை சோழர் வரலாற்றில், மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் கொண்டிருந்த பங்கு சொல்வதற்கரியது . ஒவ்வொரு இடம் குறித்தும் ஒரு தனிப்பதிவேஇட்டாலும் கொள்ளாத அளவிற்கு தகவல்கள் உள்ளன. நம்மால் முடிந்த வரை சேகரிக்கப்பட்ட தகவல்களும் நிழற்படங்களும் பயணத்திற்குப் பின்பு பதியப்படும்...
தொடர்ந்து பதிவோம்...இணைந்திருங்கள்...
Subscribe to:
Posts (Atom)